செண்பகத்தோப்புக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க வனத்துறைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By அ.கோபாலகிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்புக்கு செல்வோரிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வனத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான 350 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன.

செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான தென் திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் காட்டழகர் கோயில், வனப்பேச்சி அம்மன் கோயில், ராக்கச்சி அம்மன் கோயில் உள்ளது.

அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்படி ஆண்டாள் கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு செண்பகத்தோப்பு வரும் பக்தர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு குழு சார்பில் சோதனை சாவடி அமைத்து செண்பகதோப்பு பகுதிக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், விவசாயிகள் ஆகியோரிடம் ஒரு நபருக்கு ரூ.20 வீதம் சூழல் பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டணம் செலுத்துவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். விவசயிகளிடம் கட்டணம் வசூலிக்கும் வனத்துறையைக் கண்டித்து விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இடையே பிரச்சனை ஏற்பட்டதால், இரு தரப்பும் கட்டணம் வசூலிக்க வட்டாட்சியர் தடை விதித்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மேம்பாட்டு குழு கூட்டத்தில், செண்பகதோப்புக்கு வரும் பக்தர்களிடம் பார்க்கிங் கட்டணத்தை வனத்துறை வசூலித்து, கோயில் நிர்வாகத்துக்கு 60 சதவீதம் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்க தடை விதித்து நீதிபதி ஆர்.விஜயகுமார் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE