ருசு -ம.காமுத்துரை

By காமதேனு

வடமேற்குப் பருவமழையும் பொய்த்துப்போனதாகச் சொல்லப்பட்ட ஒரு வெய்யில் பொழுதில்தான் வேலையொன்று இருப்பதாய் வடக்குத் தெருவிலிருந்து மூப்பனுக்கு அந்த ருசு வந்தது.

அழகர் கோமாளி, ராஜபார்ட் பாலு, பிச்சைமணி உட்பட நான்குபேரையும் ஒன்று கூட்டினார். எந்த ஊரிலிருந்து கிராக்கி வந்துள்ளதென அறிய அனைவருக்கும் ஆவல். மூப்பன் வேறெந்தத் தகவலையும் அவர்களிடம் சொல்லவில்லை. ‘வேலை வந்திருக்கு. பேசலாமா?’ என்று மட்டும்தான் சொல்லியிருந்தார். தந்திபோல் பாவித்து மூச்சிரைக்க ஓடி வந்தனர் அவர்கள். இதுவே, தாமதமென மூப்பன் முணங்கிக்கொண்டிருந்தார். இத்தகைய சமயத்தில்தான் தன்னுடைய பிரலாபங்கள் குறித்தும், இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை பற்றியும் அவரால் அறிக்கை வாசிக்க முடியும். குருபக்தி, தொழில்தர்மம், நேர்மை, நாணயம் இவையெல்லாம் காற்றில் பறப்பதாகக் கண்டமேனிக்குத் திட்டினாலும், மௌனமாய் வாங்கிக்கொள்வார்கள். அன்றைய பொழுதுக்கு வேலை அமைந்தால் சரி. சிலநாள் பாடு ஒழியுமே!

ஓசையின் சுவடுகளற்று வெறுமையாய்க் கிடந்த அந்தக் கூட்டுச்சாலையின் அரசமரத்தடியில் நிற்பது குறித்த விசனத்துடன் பாலு கனத்த குரலில் செருமினான். அச்செருமலின் அர்த்தம் யாவரும் அறிந்ததே! மூப்பனுக்கு அவமானமாய் இருந்தது. வேசம் கட்டியிருந்தால், இன்னேரம் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். காலில் சலங்கை இல்லாத நிலையில், குதிங்காலைத் தரையில் ஆழமாய் மிதிக்கத்தான் செய்தார். ‘யாரடீ கள்ளி நீ அடாத இவ்விருளில் வந்து பேரிடி முழக்கம் செய்து பிணம்தனைச் சுடவும் ஆனாய். கூறடி உந்தன் பெயர். . .’ என சுடலை காத்த அரிச்சந்திரனைப் போல ஓங்கார ஓசையுடன் பேசலானார்.

‘எல்லாத்தையும் மூடிக்கிட்டு சும்மாத் திரிய மாட்டாம, அய்யோ பாவம்னு ஊத்தப்பயலுகளுக்கு கெராக்கி தேடி சுத்தியலஞ்சேம்பாரு... என்னிய செருப்பக் கழட்டி செமக்க அடிக்கணும்’ என்பதுபோலப் பேசியவர், தனது தாய்மீதும் பிள்ளைகள்மீதும் கையடித்துச் சத்தியம் செய்தார். “இம்புட்டுனு ரேட்டு பேசி, ஒத்தக்காசு அட்டுவான்சு வாங்கியிருந்தா, உள்ளங்கையில சோறாக்கி ஒனக்கு முந்தி விரிச்சுப் பந்தி வக்கிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE