மூணாறில் செந்நாய்கள் தாக்கியதில் 40 ஆடுகள் உயிரிழப்பு

By என்.கணேஷ்ராஜ்

மூணாறு: மூணாறு அருகே செந்நாய்கள் தாக்கியதில் 40 ஆடுகள் உயிரிழந்தன. வனத்துறையினர் இழப்பீடு தர வேண்டுமென ஆடுகளின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூணாறு அருகே உள்ள வட்டவடை ஊராட்சிக்கு உட்பட்ட சிலந்தியாறு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (38). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தனக்குச் செந்தமான 50 ஆடுகளை மேய்ச்சல் பகுதியில் விட்டுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பின்பு மாலை 5 மணிக்கு வழக்கம்போல் ஆடுகளை அழைத்து வர மேய்ச்சல் பகுதிக்கு சென்றார். அப்போது 40 ஆடுகளை செந்நாய் கூட்டம் தாக்கி கொன்றிருப்பதும், 10ஆடுகளை காணவில்லை என்பதும், தெரியவந்தது.

இதுகுறித்து கனகராஜ் கூறுகையில், ‘இந்த ஆடுகளை வளர்த்துதான் நான் பிழைப்பு நடத்தி வந்தேன். எனவே, இதற்கு, வனத்துறையினர் இழப்பீடு தர வேண்டும்,’ என்றார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழத்தோட்டம் எனும் இடத்துக்கு அருகில் நான்கு பசுக்களை செந்நாய்கள் தாக்க முயன்றன. அருகில் உள்ளவர்கள் விரட்டியதால் பசுக்கள் தப்பின.மூணாறில் ஏற்கெனவே யானை, புலி தாக்குதல் இருந்து வரும் நிலையில் தற்போது செந்நாய்களால், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படத் தொடங்கி உள்ளது,’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE