காஷ்மீரில் ரமலான் நோன்பை முன்னிட்டு ஒரு மாத காலம் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறது இந்திய ராணுவம்.
இந்த ஆண்டு மே 16 முதல் ஜூன் 15 வரை 30 நாட்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. எப்போதும் தாக்குதலும் உயிர்ப்பலியும் நடக்கும் காஷ்மீரில் இந்த ஈகைத் திருநாளை அமைதியாகக் கொண்டாட மக்கள் அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடக்கின்றன. இதில் அப்பாவி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கொல்லப்படுகிறார்கள். கடந்த ஏப்ரலில் மட்டுமே 41 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இந்த மாதம் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், ரமலான் நோன்புக்கான ஒரு மாத காலத்துக்குத் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளையும் பாதுகாப்புக் கெடுபிடிகளையும் நிறுத்திவைக்க காஷ்மீர் முதல்வர் மெகபூபா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். மத்திய அரசும் அவரது கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. அதேநேரம், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்த எந்தத் தடையும் இல்லை.
இந்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பிரிவினைவாதத் தலைவர்கள் வரவேற்கவில்லை. “ஒருமாதத்துக்கு மட்டும் கொலைகளை நிறுத்திவிட்டு மீண்டும் கொலைகளை நிகழ்த்தப்போவதை ஏற்க முடியாது” என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், மக்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அரசின் இந்த முடிவு ரமலானுக்குப் பிறகும் தொடர்ந்தால் நன்றாக இருக்குமே என்பது அவர்களின் விருப்பம்.