தவறான வாட்ஸ் - அப் தகவலை நம்பி, அப்பாவிகள் ஐந்து பேர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்!
தமிழகத்தின் சில பகுதிகளில் குழந்தைகளைக் கடத்துபவர்கள் எனச் சந்தேகப்பட்டு தனிநபர்கள் சிலர் பொதுஜனத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனிதத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் இதுபோன்ற சம்பவங்கள், கடந்த ஒருமாதத்தில் மட்டுமே ஐந்து இடங்களில் நடந்துள்ளன.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ருக்மணி (65). கடந்த வாரம், இவரும் இவரது உறவினர்களும் போளூர் அருகே ஜமுனாமாத்தூர் கிராமத்தில் இருக்கும் தங்களது குலதெய்வ கோயிலுக்கு காரில் வந்தனர். போளூர் அருகே இவர்கள் காரை நிறுத்தியிருந்தபோது, காருக்கு அருகில் வந்த குழந்தைக்கு சாக்லேட் தர முயன்றார் ருக்மணி. இதைப் பார்த்த ஊர் மக்கள், குழந்தையைக் கடத்த வந்திருப்பவர் என்று சந்தேகித்து அவரையும் அவரது உறவினர்களையும் கடுமையாகத் தாக்கினர். இதில், ருக்மணி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் இதுவரை 23 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
அதே நாளில் பழவேற்காடு பகுதியில், மனநலம் குன்றிய 30 வயது இளைஞர் ஒருவரை, குழந்தைகளைக் கடத்த முயல்கிறார் என்ற சந்தேகத்தில் ஊர் மக்கள் அடித்துக் கொன்றனர். கொன்றதோடு இல்லாமல் அவரது பிணத்தை ஏரிக்கு அருகில் உள்ள பாலத்தில் தொங்கவிட்டுள்ளனர். கடந்த மாதம் குடியாத்தத்தில் 30 வயது இளைஞர் ஒருவரும், காஞ்சிபுரத்தில் 45 வயது மாற்றுத்திறனாளியும், திருவண்ணாமலையில் பதின்ம வயது இளைஞர் ஒருவரும் இதே சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டனர்.