வண்டலூர்: காவலர் பொதுப் பள்ளியை மேம்படுத்த உள்துறை செயலாளர் அமுதா நேரில் ஆய்வு

By பெ.ஜேம்ஸ் குமார்

மேலக்கோட்டையூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் செயல்படும் காவலர் பொதுப் பள்ளியை மேம்படுத்துவது குறித்து உள்துறை செயலாளர் அமுதா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியக வளாகத்தில் தற்காலிக உண்டு உறைவிட காவலர் பொதுப் பள்ளியை 2018-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த உண்டு உறைவிடப் பள்ளியை காவலர் பொதுப் பள்ளி என்ற பெயரில் நிறுவுவதற்காக 51 கோடியே 2018 - 2019 கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், ஆங்கில வழி கல்வியில் 5ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது. காவலர் பொதுப் பள்ளியில் காவலர்களின் குழந்தைகள் மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குழந்தைகளும் கல்வி பயில்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, ரூ.51 கோடி மதிப்பில் மேலக்கோட்டையூரில் 8 ஏக்கர் பரப்பரவில் எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பள்ளி முறையாக செயல்படததால் 50-க்கும் குறைவாக மாணவர்களே தற்போது இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே, காவலர் பொதுப் பள்ளி வளாகத்தில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தனியார் பள்ளிக்கு நிகரான வசதி கொண்ட இந்தப் பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை உள்துறை செயலாளர் அமுதா, பள்ளிக் கல்வி துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காவலர் பொது பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளியை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உண்டு உறைவிடப் பள்ளி என்றபோதும் இங்கு தங்கும் வசதி இல்லாமல் உள்ளது. அதற்காக விடுதி கட்டப்படவுள்ள இடத்தையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பள்ளி வாளகத்தில் உள்ள நீச்சல் குளத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE