சாக்கடை கழிவு நீரில் நடந்து செல்லும் அவலம்: ஓசூர் வாகினி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தல்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் அருகே சென்னசந்திரம் ஊராட்சி விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள வாகினி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து செல்லும் நிலையில், ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் அருகே சென்னசந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாத புரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி இஸ்லாமிய மக்கள் 90 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை: இங்கு தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே, இப்பகுதி மக்கள் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல விஸ்வநாதபுரத்தில் உள்ள வாகினி ஆற்றைக் கடந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பாரதியார் நகருக்கு வந்து அங்கிருந்து ஆவலப்பள்ளி சாலைக்கு வந்து பிற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்நேரங்களில் பாரதியார் நகர் பகுதிக்கு ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலையில், 2 கிமீ தூரம் சுற்றி பாகலூர் சாலைக்கு வந்து மற்ற இடங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

சிரமத்தைச் சந்திக்கும் மாணவர்கள்: மேலும், ஓசூர் நகரப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் வாகினி ஆற்றில் கலந்து ஆண்டு முழுவதும் ஓடுவதால், மழையில்லாத நேரங்களில் ஆற்றில் ஓடும் சாக்கடை கழிவுநீரில் இறங்கி ஆற்றை கடக்கும் அவலம் உள்ளது.

குறிப்பாக இப்பகுதி மாணவர்கள் பாரதியார் நகரில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர். இப்பகுதி மக்கள் வேலைவாய்ப்புக்காக ஆவலப்பள்ளியில் உள்ள அட்டை கம்பெனிக்கு சென்று வருகின்றனர்.

இதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி ஆற்றில் ஓடும் கழிவு நீரில் இறங்கிச் செல்வதால், நோய்த் தொற்று அபாயம் உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விஷ ஜந்துக்கள் நடமாட்டம்: இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த முபாரக் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சிக்கும், சென்னசந்திரம் ஊராட்சிக்கும் இடையே எங்கள் பகுதி உள்ளது. எங்கள் குடியிருப்பு பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. எங்கள் பகுதியிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்ல வாகினி ஆற்றில் செல்லும் சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் ஆற்றை முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இரவில் கழிவுநீரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் இருக்கும். எனவே, ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE