யதார்த்தங்கள்!- இந்திரா சௌந்தர்ராஜன்

By காமதேனு

அந்த அரசாங்க அலுவலகக் கட்டிடத்துக்குள் சண்முகம் நுழைந்தபோது மணி மிகச் சரியாக 9.50! முடிந்துபோன சந்தைவெளி போல வெறிச்சோடிக் கிடந்தது அலுவலகம். உள்ளே, தலையெழுத்தே என்று அலுவலகத் தரைப்பரப்பை வீசிவீசிக் கூட்டிக்கொண்டிருந்தாள் ஒரு முதிர்ந்த பெண். குப்பைகளைக் குவித்து அள்ளுவதற்குப் பதிலாக பீரோக்களுக்குக் கீழேயும், கண்களுக்குப் புலனாகாத பகுதிக்குள்ளும் தள்ளிவிடுவதைத்தான் அவள் அதிகம் செய்தாள்.

ஒரு ஓரமாக மரபெஞ்ச் ஒன்று இருந்தது. அதில் போய் சண்முகம் தற்காலிகமாக அமர்ந்துகொண்டான். தன் பேக்கை அந்த பெஞ்சின் மேல் வைத்தபோது, பெஞ்சில் பேனாவில் ‘ரஜினி வாழ்க!’ என்று யாரோ ஒரு ரசிகக் குஞ்சு எழுதியிருந்தது கண்ணில் பட்டது. அந்த பெஞ்ச் முழுக்கவே இப்படி நிறைய வாழ்க வரைவுகள். தன்னைப் போலவே, அந்த தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து காத்திருக்கும் தருணத்தில் பொழுதுபோகாமல் திணறும்போது, யாரோ இப்படி வரைந்துவைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான்.

மணி 10.10!

ஒவ்வொருவராக அந்த அலுவலகத்துக்குள் அடையத் தொடங்கினார்கள். சிலரது டேபிளில் கையளவு கடவுளர் படங்கள் டேபிளின் தடித்த கண்ணாடிக்குக் கீழே அடைந்து கிடந்தன. வந்தவுடன் முதல் காரியமாக அதைக் கண்களில் ஒத்திக்கொண்டனர். சில டேபிள்களில் வேளாங்கண்ணி மாதா படமும் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE