ஆசிரியர் இல்லாத பள்ளிகள்!

By காமதேனு

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.27,205.88 கோடி ஒதுக்கியிருக்கிறார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கடந்த ஆண்டைவிட ரூ. 1205 கோடி ரூபாய் அதிகம்; அதோடு 100 புதிய உயர்நிலைப் பள்ளிகளும், 100 நடுநிலைப் பள்ளிகளும் தொடங்கப்படும் என்றெல்லாம் அறிவிப்புகள் சொன்னாலும், போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களைத் தேர்ச்சியடைய வைத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், ‘தலித் விடுதலை இயக்கம்’ அமைப்பைச் சேர்ந்த எஸ்.கருப்பையா, ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கேட்டுப்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அடுத்த கல்வியாண்டு தொடங்குகையில் 10% அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இருக்க மாட்டார்கள்.

ஏற்கெனவே 884 உயர்நிலை, 34 மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. இந்த ஆண்டோடு மேலும் 425 தலைமை ஆசிரியர்கள் ஓய்வுபெற உள்ளதால் ஜூன் மாதத்துக்குள் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் 1,500-ஐத் தொட்டுவிடும். இதைத்தவிர கடந்த நான்காண்டுகளில் மட்டும் 1,687 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சில உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்குக் கூட ஆசிரியர்கள் இல்லை. அவற்றை மாணவர்கள் சுயமாகப் படித்துக்கொள்ளும் அவலநிலை தொடர்கிறது. சில பள்ளிகளில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள், உயர் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE