இது ஏறத்தாழ 24 வருடங்களாக என் அடிமனதில் புதைத்து வைத்திருக்கும் ஒரு மாபெரும் ரகசியத்தின் கதை. இருபதாயிரத்து சொச்சம் ஜனங்கள் வசிக்கும் காவிரிக்கரையின் ஒரு சிற்றூரில் எனக்கும், என் நெருங்கிய நண்பன் விவேக்கிற்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். இப்போது மூன்றாவதாக உங்களுக்குத் தெரியப்போகிறது.
அது... விஜயகாந்துக்கும், கமலுக்கும், ரஜினிக்கும் அரசியல் உத்தேசங்கள் ஏதுமில்லாத... “கு” என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு பெயரைக் கூறு என்றால், தமிழ்நாட்டின் அத்தனை ஆண்களும் “குஷ்பு” என்று கூறிக்கொண்டிருந்த... தமிழ்நாட்டின் காற்று வெளி மண்டலத்தை இளையராஜாவோடு, ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கு போட ஆரம்பித்திருந்த... 1993, நவம்பர் மாதம். நானும், விவேக்கும் எம்.ஏ. படித்து முடித்துவிட்டு, கால் காசு சம்பாரித்தாலும், அது சர்க்கார் காசாகத்தான் இருக்கவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுதிக்கொண்டிருந்த காலம்.
அப்போது விவேக்கிற்கு இரண்டு கெட்டப்பழக்கங்கள். முதலாவது... பார்க்கும் அத்தனை இளம் பெண்களையும் முதல் சந்திப்பிலேயே, “ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு” என்று சொல்லி முடிக்கும் நேரத்திற்குள் காதலித்துவிடுவான். அடுத்தது... தான் காதலிக்கும் பெண்களைப் பற்றி கவிதை எழுதுவது! ஒருமுறை, “உயிருள்ளவரை உஷா அல்ல. உயிர் போனபின்பும் உஷா...” என்று எழுதி, அதை உஷாவாகப்பட்டவளிடமே காண்பித்தான். அவள், “யார் உயிர் போன பின்பு? என்று கேட்க... விவேக் ஓடி வந்துவிட்டான்.
ஒருநாள் நடுராத்திரி, தெருவில் கட்டில் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி,. “சந்தியா... நீதான் என் இந்தியா” என்று கூறிய கவிதைக்காக இன்று வரையிலும் நான் அவனை மன்னிக்கவேயில்லை.