அமலாவுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது. ஆனாலும், எழுந்திருக்க மனமில்லை. விடிந்தும் விடியாததுபோல் இருந்தது அவளுக்கு. அன்று மட்டுமல்ல; இப்போதெல்லாம் தினமும் அப்படித்தான் இருக்கிறது. அலுவலகம் போகச் சோம்பலாக இருக்கிறது. அப்படியே போனாலும் மற்றவர்களுடன் முகம் கொடுத்துப் பேச முடியும் என்று தோன்றவில்லை. அவளுடைய முகத்தில் மகிழ்ச்சி மறைந்து பல வாரங்களாகிவிட்டன. மற்றவர்கள் சிரித்துப் பேசினாலும் எரிச்சல் வருகிறது. முன்பு ஆர்வத்துடன் செய்த செயல்களில் தற்போது உற்சாகம் இல்லை.
அமலாவுக்குத் தன் சொந்த வேலைகளைக் கவனிப்பதே சிரமமாக இருந்தது. வீட்டில் கணவர்தான் எல்லா வேலைகளையும் செய்கிறார். குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் செய்து அனுப்புகிறார். அவரும் எத்தனை நாளுக்குத்தான் பொறுமையுடன் கவனிப்பார்? அவருக்குக் கோபம் வருகிறது. ‘எழுந்து வேலையைக் கவனி!’ என அதட்டுகிறார். மாமியார் சத்தம் போடுகிறார்.
அமலாவின் மனக்கஷ்டங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தான் மற்றவர்களுக்குச் சுமையாக இருக்கிறோம் என நினைக்கிறார். தன்னால் மற்றவர்களுக்குப் பயன் இல்லை என்று எண்ணம் மனசுக்குள் ரீப்ளே ஆகிறது. ஒரு கட்டத்தில் இப்படியே இருப்பதைவிட செத்துவிடுவது மேல் என்று எண்ணுகிறார். தற்கொலைக்கும் முயல்கிறார்.
தனக்கு ஏற்பட்டுள்ளது மனச்சோர்வு என்பதையும், அதற்கு முறைப்படி சிகிச்சை எடுத்தால் எளிதில் மறைந்துவிடும் என்பதையும் அறியாமல் கஷ்டப்படும் அமலாவைப் போல் இன்னும் பல ஆயிரம் அமலாக்களை நம்மிடம் காண முடியும். ஏனெனில், மனச்சோர்வு ஆண்களைவிட பெண்களுக்கு ஏற்படுவதுதான் மிக அதிகம் என்கிறது ஒரு மருத்துவக் கணிப்பு.