வறண்ட பூமி என வர்ணிக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 ஏக்கரில் காய்கறித் தோட்டம், பக்கத்திலேயே 100 ஏக்கரில் அரேபிய பேரீச்சைத் தோப்பு. தினமும் காரில் போய், அறுவடை செய்கிறார் விவசாயி. நம்ப முடியவில்லையா?
மேலே படியுங்கள்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் இருக்கிறது வீரசோழன் கிராமம். இங்குதான் மேலே சொன்னபடி, விவசாயம் செய்கிறார் கேரள இளைஞர் இப்ராஹிம் சபில்.
காய்கறிச் சோலை
சபிலின் தோட்டம் பாலைவனச் சோலைபோல காட்சி தருகிறது. ஒருபக்கம் கத்தரி, இன்னொரு பக்கம் தக்காளி, வெண்டை, மிளகாய், இடையிடையே, சின்ன வெங்காயம், துவரை, உளுந்து. இப்படி 25 ஏக்கரில் வெவ்வேறு விதமான காய்கறிகள். அதுமட்டுமல்ல, ஒருபக்கம் எருமை மாட்டு மந்தை. இன்னொரு பக்கம் நாட்டுக்கோழிகள் கூட்டம் கூட்டமாய் மேய்கின்றன. வெவ்வேறு ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து வெளியான தண்ணீரைச் சேகரித்து வைத்துள்ள சிமென்ட் தொட்டியில், ஆயிரக்கணக்கான நாட்டு மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.