வடசென்னை அனல்மின் நிலையத்துக்காக இந்தோனேஷியாவில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி: மின்வாரியம் முடிவு

By KU BUREAU

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-ல் மின் உற்பத்தி செய்யஇந்தோனேஷியாவில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் ரூ.10,158 கோடி செலவில் வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3 என்ற புதிய அனல்மின் நிலையத்தை அமைத்துள்ளது. 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த மின் நிலையத்தை கடந்த மார்ச்சில் முதல்வர் திறந்துவைத்தார்.

இந்நிலையில், இந்த மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

மின்வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களுக்கு ஆண்டுக்கு 223.4 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரி மகாநதி, சிங்கரேணி ஆகிய நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வாங்கப்படுகிறது. இதுதவிர, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-ல் மின் உற்பத்தி செய்வதற்காக நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த மின்நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக நிலக்கரியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தோனேஷியாவில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெண்டர் விடப்படும். மேலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை சேமித்து வைக்க கிடங்கு வசதியும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE