திரிபுராவில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய அடியோடு, லெனின் சிலைகள் அங்கு தகர்க்கப்பட்டது தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தமிழகத்தில் பெரும் சர்ச்சைத் தீயை ஊதிவிட்டார் பாஜக செயலர் ஹெச்.ராஜா. லெனின் சிலைத் தகர்ப்பை வரவேற்று, ’அடுத்ததாக தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமியின் சிலைகள்’ என்று அவர் பதிவிட்டது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.
அன்றைய இரவே திருப்பத்தூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் முத்துராமனும் அவரது கூட்டாளியும் சேர்ந்து பெரியார் சிலை மீது கற்களை வீசி சேதப்படுத்தியபோது தமிழகமே கொந்தளித்தது. சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் முத்துராமனை நையப் புடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திக, திமுக, அதிமுக, மதிமுக, விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி, நாம் தமிழர் இயக்கம் என்று பெரும்பான்மைக் கட்சிகளும் ஒருசேர வெளிப்படுத்திய எதிர்ப்பு பாஜகவுக்குள்ளும் எதிரொலித்தது. தமிழக பாஜக தலைவர்களும் ராஜாவின் பதிவைக் கண்டித்தனர்.