சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
ஜாஸ் பட்லர் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிரைடன் கார்ஸ் 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் படேலும் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
166 ரன்கள் இலக்குடன் பேட் செய்தத இந்திய அணி 9.1 ஓவர்களில் 78 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்களை இழந்தது. இதன் பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் உதவியுடன் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார் திலக் வர்மா.
வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்ததார். அபாரமாக விளையாடிய திலக் வர்மா 39 பந்துகளில், அரை சதம் கடந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 21 ரன்களே தேவை என்ற நிலை உருவானது. ஆதில் ரஷித் வீசிய 17-வது ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து அர்ஷ்தீப் சிங்கை (6) அவுட்டாக்கினார். இதனால் ஆட்டத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஏனெனில் கைவசம் 2 விக்கெட் மட்டுமே இருக்க கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. இந்திய அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 55 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்களும், ரவி பிஷ்னோய் 5 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.