வைஷ்ணவியின் சுழலால் இந்திய அணி அபார வெற்றி!

By KU BUREAU

கோலாலம்பூர்: 19-வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடன் மோதியது. முதலில் பேட் செய்த மலேசிய அணி 14.3 ஓவர்களில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனையான இடது கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா 5 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் ஹாட்ரிக்கும் அடங்கும். 14-வது ஓவரை வீசிய வைஷ்ணவி, மலேசியாவின் நூர் ஐன் பிந்தி ரோஸ்லான், நூர் இஸ்மா டானியா, சித்தி நஸ்வா ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். மேலும் யு-19 உலகக் கோப்பை தொடரில் இது சிறப்பான பந்து வீச்சாக அமைந்தது.

மற்றொரு இடதுகை சுழற்பந்து வீச்சு வீராங்கனையான ஆயுஷி சுக்லா 3 விக்கெட்களை கைப்பற்றினார். எளிதான இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 2.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோங்கடி த்ரிஷா 27, கமலினி 4 ரன்கள் சேர்த்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE