மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டி மற்றும் ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29-ம் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியும் காலே மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில் பிப்ரவரி 13-ம் தேதி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் நீக்கப்பட்ட தொடக்க பேட்ஸ்மேனான நேதன் மெக்ஸ்வீனி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டன் பாட் கம்மின்ஸ் 2-வது குழந்தை பிறப்பை எதிர்நோக்கி உள்ளதால் இலங்கை தொடரில் இடம் பெறவில்லை. இதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக 21 வயதான கூப்பர் கோனொலி சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக நேதன் லயன், டாட் முர்பி, மாட் குனேமேன் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம் பெற்றுள்னர். காயத்தில் இருந்து குணமடையாததால் ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்படவில்லை. அதேவேளையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்ட ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஸுக்கும் அணியில் இடம் வழங்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், நேதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, மாட் குனேமேன், பியூ வெப்ஸ்டர், நேதன் லயன், டாட் மர்பி, சீன் அபாட், ஸ்காட் போலண்ட், மிட்செல் ஸ்டார்க்.