ஆஸி.யை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்: சொல்கிறார் தென் ஆப்பிரிக்கா வேகம் ரபாடா

By KU BUREAU

கேப்டவுன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என வென்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கெனவே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. வரும் ஜூன் மாதம் 11-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், கூறியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சிறிது தூலைவில் உள்ளது. ஆனால் இறுதிப் போட்டி என்பது மிகப்பெரிய நிகழ்வு. அது உங்களை தூண்டவே செய்யும். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையே எப்போதும் ஒரு தீவிரமான போட்டி உள்ளது. ஏனென்றால் நாங்கள் கிரிக்கெட்டை ஒரே மாதிரியாக விளையாடுகிறோம். நாங்கள் கடினமாக விளையாடுகிறோம். அவர்கள், எங்களை கடுமையாக எதிர்க்கப் போகிறார்கள், அது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களை எப்படி வெல்வது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

நூறு சதவீதம் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. நாங்கள் இப்போது விளையாடி வரும் சிறந்த வடிவம் இதுதான். நீங்கள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டையும் எங்கள் ஜாம்பவான்களையும் பார்க்கும்போது, அவர்கள் அனைவரும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்துள்ளதை பார்க்க முடியும். உலகின் சிறந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்தான். பாகிஸ்தானுக்கு எதிராக முடிவடைந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு அற்புதமான விளம்பரமாக உள்ளது. இவ்வாறு காகிசோ ரபாடா கூறினார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி வென்றதில் காகிசோ ரபாடா முக்கிய பங்கு வகித்திருந்தார். இதனால் அவர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE