மெல்பர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்களும், இந்திய அணி 369 ரன்களும் எடுத்தன. 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 82 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. நேதன் லயன் 41, ஸ்காட் போலண்ட் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 83.4 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நேதன் லயன் 55 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டானார். இந்திய அணி சார்பில் ஜஸ்பிரீத் பும்ரா 5, முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 340 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 33 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை தாரை வார்த்தது.
ரோஹித் சர்மா 40 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்ட விராட் கோலி 29 பந்துகளில், 5 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தை கவர் டிரைவ் விளையாட முயன்று சிலிப் திசையில் உஸ்மான் கவாஜாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதைடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த்துடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் போராடினார்.
» மன்மோகன் சிங் மறைந்த நிலையில் ராகுல் காந்திக்கு வெளிநாட்டுப் பயணம் அவசியமா? - பாஜக கேள்வி
ரிஷப் பந்த் 104 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசையில் மிட்செல் மார்ஷிடம் கேட் ஆனது. 4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் இந்திய அணி தோல்வியை நோக்கி பயணித்தது. ரவீந்திர ஜடேஜா 2, நித்திஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் நடையை கட்டினர்.
நிதானமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 208 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். லெக் திசையில் பவுன்ஸராக வீசப்பட்ட பந்தை ஜெய்ஸ்வால் விளாச முயன்றார். ஆனால் பந்து மட்டையில் படாத நிலையில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் தஞ்சம் அடைந்தது. களநடுவர் அவுட் கொடுக்க நிலையில் ஆஸ்திரேலிய அணி மேல்முறையீடு செய்தது.
இதில், பந்து மட்டை அல்லது கையுறையில் பட்டதற்கான எந்தவித ஆதாரத்தையும் ஸ்னிக்கோ மீட்டர் காண்பிக்கவில்லை. ஆனால் 3-வது நடுவரோ பந்து விலகிச் சென்றதை மட்டும் கருத்தில் கொண்டு அவுட் கொடுத்துவிட்டார். ஜெய்ஸ்வால் களநடுவர்களிடம் வாக்வாதம் செய்தார். எனினும் பலன் இல்லாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதன் பின்னர் ஆகாஷ் தீப் 7, பும்ரா 0, முகமது சிராஜ் 0 என நடையை கட்ட இந்திய அணி 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தனது கடைசி 7 விக்கெட்களை 20.4 ஓவர்களில் 34 ரன்களுக்கு கொத்தாக தாரைவார்த்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், நேதன் யலன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக பாட் கம்மின்ஸ் தேர்வானார். அவர், பந்து வீச்சில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 6 விக்கெட்களையும், பேட்டிங்கில் 90 ரன்களையும் விளாசியிருந்தார். 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
‘போராட முடியவில்லை‘: தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “ஆட்டத்தின் முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் போராட விரும்பினோம், ஆனால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்தோம், ஆனால் அவர்கள் கடுமையாக போராடினர். நாங்கள் எங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்றார்.
இறுதிப் போட்டி வாய்ப்பு இருக்கிறதா? ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது மேலும் சிக்கலாகி உள்ளது. தற்போது இந்திய அணி 52.78 சராசரி புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 61.46 சராசரி புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. தென் ஆப்பிரிக்கா 66.67 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் 3-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகும். சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவை பொறுத்துதான் இந்திய அணியின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு தெரியவரும்.
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் ஆஸ்திரேலியாவை 1-0 என தோற்கடிக்க வேண்டும். இது நிகழ்ந்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கைகூடக்கூடும். ஆனால் சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது இந்திய அணி தோல்வியை சந்தித்தாலோ இறுதிப் போட்டி கனவு சிதைந்துவிடும்.