துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய தனது லீக் ஆட்டங்கள் அனைத்தையும் துபாயில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் பிப்ரவரி 23-ம் தேதி மோதுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி இந்திய அணி, பாகிஸ்தான் சென்று விளையாடாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்தது.
இதையடுத்து இரு நாட்டு வாரியங்களிடம் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களை இந்தியா நடத்தினாலும் சரி, பாகிஸ்தான் நடத்தினாலும் சரி, இரு அணிகள் மோதும் ஆட்டங்களை ஹைபிரிட் மாடலில் பொதுவான இடத்திலேயே நடத்த வேண்டும். பாகிஸ்தான் அணியும் இந்தியா சென்று விளையாடாது என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.
இதன்படி பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
» விலைவாசி உயர்வால் மக்கள் அவதி; கும்பகர்ணன் போல தூங்குகிறது மத்திய அரசு: ராகுல் காந்தி தாக்கு
இந்திய அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் அந்த ஆட்டங்களும் துபாயில் நடத்தப்படும். தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.
பிப்ரவரி 19-ம் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மார்ச் 2-ம் தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்திய அணி.