சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முடிவில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான 38 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர், நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் புறப்பட்டார். நேற்று காலை அஸ்வின், சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் தனக்காக காத்திருந்த மனைவி பிரீத்தி மற்றும் இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றார் அஸ்வின்.
தொடர்ந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற அஸ்வினை அவரது தாய் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றார். அஸ்வினின் தந்தையும் உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார். பெரும்பாலான ரசிகர்கள் திரண்டு வந்து அஸ்வினை மேளம் தாளம் முழங்க வரவேற்றனர். தொடர்ந்து அஸ்வின் கூறியதாவது:
உண்மையில் எனக்கு இப்படியொரு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அமைதியாக வீட்டுக்கு வந்து ஓய்வு எடுக்கலாம் என்றே நினைத்தேன். இத்தனை பேர் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நாளை எனக்கானதற்காக மாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று வீடு திரும்பிய போது இப்படியொரு வரவேற்பு இருந்தது. அதே உணர்வை இப்போது பெறுகிறேன்.
» மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு
» அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மாநிலங்களவையில் கார்கே தாக்கல்
ஓய்வு அறிவிப்பு பலருக்கு உணர்ச்சிகரமானதாக இருக்கலாம். அதில் இருந்து மீள்வதற்கு அவர்களுக்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு நிம்மதியாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது. ஓய்வு குறித்த எண்ணம் சில மாதங்களாக என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. பிரிஸ்பன் டெஸ்டின் 4-வது நாளில் முடிவு செய்து கடைசி நாளில் ஓய்வு முடிவை அறிவித்தேன். இது ஒன்றும் பெரிய முடிவு இல்லை.
திடீரென ஓய்வு முடிவுக்கு வந்ததில் எனக்கு வருத்தம் இல்லை. பொதுவாக நான், இரவில் உறங்கச் செல்லும் போது விக்கெட்கள் வீழ்த்தியது, ரன்கள் சேர்த்தது நினைவுக்கு வரும். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக எனக்கு அந்த நினைவுகள் வரவில்லை. இது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பதற்கான அறிகுறியாக தெரிந்தது. புதிய இலக்குகள் எதையும் திட்டமிடவில்லை. இப்போதைக்கு ஓய்வு எடுக்க விரும்புகிறேன். உண்மையில் செயல்படாமல் இருப்பது கடினம். இப்போது அதை செய்ய முயற்சிக்க வேண்டும்.
அடுத்த பயணத்துக்கான பாதையை இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும். இந்திய அணிக்காக விளையாடும் அஸ்வின் தான் ஓய்வு பெற்றுள்ளார். எனக்குள் கிரிக்கெட் இன்னும் ஓய்வு பெறவில்லை. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளேன். முடிந்தவரை நீண்ட காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் விளையாடினாலும் ஆச்சர்யம் இல்லை. இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.