உலக கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை - வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்!

By KU BUREAU

சென்னை: உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் பதக்கம் வென்ற மித்ரா மற்றும் நாகஜோதிக்கு தலா ரூ.50 லட்சத்திற்கான காசோலையை அவர் வழங்கினார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.

வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார். அவரைப்போலவே, தங்கை மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தங்கை எம்.காசிமா -க்கு ரூ.1 கோடி, தங்கை வி.மித்ரா -க்கு ரூ.50 லட்சம், தங்கை கே.நாகஜோதி -க்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம். தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் கழக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா 3 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருடன் பங்கேற்ற கேரம் வீராங்கனைகள் நாக ஜோதி, மித்ரா ஆகியோரும் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். எளிய பின்னணியில் கொண்ட இவர்களுக்கு தமிழக அரசு எந்த நிதியுதவியும் அறிவிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. செஸ் சாம்பியனான குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி கொடுக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு பரிசுத்தொகை வழங்காததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் கேரம் வீராங்கனைகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE