பிரிஸ்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சிறப்பான பேட்டிங்காலும், பின்வரிசையில் பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தாலும் இந்திய அணி பாலோ-ஆனை தவிர்த்தது.
பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் விளாசினர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4, ஷுப்மன் கில் 1, விராட் கோலி 3, ரிஷப் பந்த் 9 ரன்களில் நடையை கட்டினர்.
கே.எல்.ராகுல் 33 ரன்களும், ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ரோஹித் சர்மா 27 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை கால்கள் நகர்வு இல்லாமல் டிரைவ் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டையில் உரசி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனது.
74 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். கே.எல்.ராகுல் 85 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது அவருக்கு 17-வது அரை சதமாக அமைந்தது. இந்திய அணி 30.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் சேர்த்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
» ரிமோட் வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய ராணுவ துணை தளபதி உயிரிழப்பு: பின்னணியில் உக்ரைன் ராணுவம்
» ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை முற்றிலுமாக எதிர்க்கிறோம்: கனிமொழி எம்.பி. கருத்து
25 நிமிடங்களுக்கு பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 139 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் வீசிய பந்தை சிலிப் திசையை நோக்கி கட் செய்தார். ஆனால் அங்கு நின்ற ஸ்டீவ் ஸ்மித் வலதுபுறம் அற்புதமாக பாய்ந்து கேட்ச் செய்தார். இதனால் சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி 115 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த ஜடேஜா மட்டையை சுற்றினார். அதிரடியாக விளையாடிய அவர், 82 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் தனது 22-வது அரை சதத்தை கடந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த நித்திஷ் குமார் ரெட்டி 61 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் போல்டானார். அப்போது இந்திய அணி பாலோ-ஆனை தவிர்ப்பதற்கு மேற்கொண்டு 52 ரன்கள் தேவையாக இருந்தது.
நித்திஷ் குமார் ரெட்டி, ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 104 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய முகமது சிராஜ் ஒரு ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில், அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். சிறப்பாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 123 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரை டீப் ஸ்கொயர் திசையை நோக்கி விளாசிய போது மிட்செல் மார்ஷிடம் கேட்ச் ஆனது.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 9 விக்கெட்கள் இழப்புக்கு 213 ஆக இருந்தது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் பாலோ-ஆனை தவிர்ப்பதற்கு இந்திய அணிக்கு 32 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த சூழ்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்பிரீத் பும்ராவுடன் இணைந்த ஆகாஷ் தீப் மட்டையை சுழற்றினார். அவருக்கு பும்ராவும் உறுதுணையாக செயல்பட்டதால் இந்திய அணி 74.2 ஓவரில் 246 ரன்களை கடந்து பாலோ-ஆனை தவிர்த்தது.
இந்திய அணி 74.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆகாஷ் தீப் 31 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களும், பும்ரா 27 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 10 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க 193 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.
கடைசி நாளான இன்று எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இந்திய அணி விரைவாக இழக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 25 ஓவர்களை எதிர்கொண்டு விரைவாக ரன்கள் சேர்ப்பதில் கவனம் செலுத்தக்கூடும். இந்த வகையில் 60 முதல் 65 ஓவர்களை மீதம் வைத்து இந்திய அணிக்கு 300 முதல் 350 ரன்கள் வரையிலான இலக்கை நிர்ணயித்து ஆட்டத்தின் முடிவுக்காக போராடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.