பிரிஸ்பன்: இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 101 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மிட்செல் ஸ்டார்க் 18 ரன்களில் ஜஸ்பிரீத் பும்ரா பந்திலும், நேதன் லயன் 2 ரன்களில் முகமது சிராஜ் பந்திலும் வெளியேறினர். தனது 9-வது அரை சதத்தை கடந்த அலெக்ஸ் கேரி 88 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் ஜஸ்பிரீத் பும்ரா 6 விக்கெட்களையும், முகமது சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆகாஷ் தீப், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் தடுமாறியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க், மிடில் ஸ்டெம்பை நோக்கி வீசிய பந்தை ஃபிளிக் செய்தார். அப்போது ஃபார்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் நின்ற மிட்செல் மார்ஷிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் 1 ரன் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் மிட்செல் மார்ஷின் அற்புதமான கேட்ச் காரணமாக வெளியேறினார்.
» உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் மன அழுத்தம் அதிகம் இருந்தது: சொல்கிறார் இளம் சாம்பியன் குகேஷ்
» நூற்பாலை நவீனமயமாக்கலுக்கு 6% வட்டி மானியம் அறிவிப்புக்கு ‘சைமா’ சார்பில் முதல்வருக்கு நன்றி
தொடர்ந்து விராட் கோலி 16 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை டிரைவ் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டையில் பட்டு விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனது. 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் களமிறங்கிய ரிஷப் பந்த் 9 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை தடுப்பாட்டம் மேற்கொண்ட போது பந்து மட்டையில் உரசி, அலெக்ஸ் கேரியிடம் தஞ்சம் அடைந்தது.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் கே.எல்.ராகுல் தடுப்பாட்டம் மேற்கொண்டபடி ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது கே.எல்.ராகுல் 64 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்களும், ரோஹித் சர்மா 6 பந்துகளில், ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை காரணமாக ஆடுகளத்தின் வெளிப்பகுதி ஈரத்தன்மையுடன் காணப்பட்டதால் 3-வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 394 ரன்கள் பின்தங்கி உள்ள இந்திய அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.