உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் மன அழுத்தம் அதிகம் இருந்தது: சொல்கிறார் இளம் சாம்பியன் குகேஷ்

By KU BUREAU

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டி.குகேஷ். இதன் மூலம் அவர், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் உலக சாம்பியனான குகேஷ், சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை 10.50 மணி அளவில் தாயகம் வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குகேஷ் கூறியதாவது: உலக சாம்பியன்ஷிப் போட்டி என்பது வெறும் செஸ் போட்டி மட்டும் அல்ல. அங்கு மன அழுத்தம், உணர்ச்சிபூர்வமான அழுத்தம் அதிகம் இருந்தது. இதை கையாள்வதற்கு மனதை திடப்படுத்துவதற்கான பயிற்சியாளர் பாடி அப்டன் கற்றுக்கொடுத்திருந்தார். அது உதவியாக இருந்தது. அவருடன் நான் நடத்திய ஆலோசனைகள், உரையாடல்கள் ஒரு வீரராக நான் முன்னேற்றம் காண்பதற்கு முக்கியமானவை இருந்தது.

தமிழக அரசிடம் இருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. முதல்வரும், துணை முதல்வரும் நான் ஏதாவது சாதிக்கும் போதெல்லாம் என்னை வீட்டிற்கு அழைத்து ஊக்குவிப்பார்கள். கடந்த ஆண்டு சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் போட்டியின் போது தமிழக அரசு எனக்கு ஸ்பான்சர் செய்தது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்கள். அந்த போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாகவே கேண்டிடேட்ஸ் தொடருக்கு விளையாட தகுதி பெற்றிருந்தேன். இதுபோன்ற ஆதரவு எங்களுக்கு மேலும் கிடைத்தால், அதிகமான செஸ் வீரர்கள் உருவாகுவார்கள் என்று நான் நம்புகிறேன். தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் வீரர்கள் சிலர், உலக சாம்பியன்ஷிப் போட்டி குறித்து விமர்சனங்கள் வைத்துள்ளனர். என்னை பொறுத்தவரையில் உலக சாம்பியன்ஷிப் போட்டி என்பது எளிதானது இல்லை. மேலும் விளையாட்டில் இந்த ஒரு தொடரையும் சாதாரணமாக நடத்த முடியாது, பலம் இல்லாமல் விளையாடவும் முடியாது. நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கான ஆட்டத்தில் அடுத்த யாருடன் விளையாடுவேன்? என்பதை இப்போதே கூற முடியாது. அதற்கு இன்னும் காலம் உள்ளது. இவ்வாறு குகேஷ் கூறினார்.

குகேஷின் பெற்றோர்கள் ரஜினிகாந்த், பத்மகுமாரி மற்றும் வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE