தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற உடுமலை மாணவிக்கு உற்சாக வரவேற்பு!

By KU BUREAU

உடுமலை: தேசிய அளவிலான அத்லெடிக் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற உடுமலை மாணவிக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உடுமலை அருகே உள்ள கொங்கல்நகர் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார், கவிதா தம்பதியின் மகள் வர்த்தினி. திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், இளங்கலை முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார்.

மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் அத்லெடிக் அசோசியேஷன் சார்பில் 39-வது தேசிய அளவிலான அத்லெடிக் விளையாட்டுப் போட்டிகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றன. இதில், தமிழகம் சார்பில் பங்கேற்ற மாணவி ஸ்ரீ வர்த்தினி, 400 மீட்டர் தடை தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். நேற்று கொங்கல்நகர் கிராமத்துக்கு வந்த மாணவிக்கு, பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவியின் பயிற்சியாளர் அழகேசன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாகவே தேசிய அத்லெடிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாணவி ஏற்கெனவே தேசிய அளவில் தங்கம் வென்றுள்ளார். அப்போது வழங்க வேண்டிய பரிசுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மத்திய, மாநில அரசின் வேலைவாய்ப்பில் மாணவிக்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது. தொடர் பயிற்சி, முயற்சி, தன்னம்பிக்கை, தினமும் 6 மணி நேர கடும் பயிற்சிக்கு அவர் அளித்த ஒத்துழைப்பு தான் வெற்றிக்கு காரணம், என்றார். மாணவியின் தந்தை சுகுமார் கூறும்போது, ‘‘எங்கள் குடும்பம் சாதாரண விவசாயப் பின்னணியை கொண்டது.

மகளின் விளையாட்டு ஆர்வத்தை பூர்த்தி செய்யவே திருப்பூருக்கு குடிபெயர்ந்தோம். இங்கு இரு சக்கர வாகன மெக்கானிக்காக பணிபுரிந்து கொண்டே, அவரை பயிற்சிக்கு அழைத்துச் சென்றேன். தேசிய அளவில் தங்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இலவசமாக பயிற்சி அளித்த பயிற்சியாளருக்கு நன்றி ’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE