ஆசிய போட்டியில் தங்கம் வென்ற குமரி வீராங்கனைக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: ஆசிய தடகள போட்டியில் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான பிரிவில் தங்கபதக்கம் வென்ற கன்னியாகுமரி வீராங்கனைக்கு அவரது சொந்த ஊரான கடையாலுமூட்டில் பொதுமக்கள் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மலையடிவார கிராமமான கடையாலுமூட்டை சேர்ந்தவர் முஜீப். இவரது மகள் ஷமீஹா பர்வின் (21). சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான இவர் நீளம் தாண்டுதல் மற்றும் தடகள போட்டிகளில் சிறுவயதில் இருந்தே திறமையானவராக இருந்து வந்தார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு போலந்தில் நடந்த பாரா ஒலிம்பிக் தடகள போட்டியில் விளையாட அனுமதி கிடைக்காத நிலையில், பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்ற உத்தரவை பெற்று நீளம் தாண்டுதலில் 7-வது இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஷமீஹா பர்வீன் கலந்து கொண்டார். அங்கு செவித்திறன் இழந்தோர் (காது கேளாதோர்) பிரிவில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் தங்கமும் வென்று இந்தியா மட்டுமின்றி தமிழகத்திற்கும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் செவித்திறன் குறைபாடுடையோர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த ஷமீஹா பர்வீன் இன்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் கடையாலுமூட்டிற்கு வந்தார். அவரை களியலில் மாஹீன் சுலைமான் தலைமையில் திரண்டு கடையாலுமூடு மக்கள் தாரை, தப்பட்டை முழங்க வரவேற்று ஊர்வலமாக கடையாலுமூட்டிற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அங்குள்ள ஜூம்மா பள்ளிவாசல் முன்பு மக்கள் திரண்டு ஷமீஹா பர்வீனுக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வெகுவாக பாராட்டினர். அப்போது மக்கள், "குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த மாணவியை சாதி, மத பேதமின்றி அனைத்து ஊர்மக்கள் திரண்டு அனைத்து தரப்பினரும் பாராட்டி வரவேற்றுள்ளோம். ஆனால் அரசு தரப்பில் அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ தங்கப்பதக்கம் வென்ற மாணவியை கண்டுகொள்ளாதது வேதனை அளிக்கிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE