சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் 6 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தார். இந்நிலையில் நேற்று 12-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. டிங் லிரென் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடன் விளையாடினார்கள். 39-வது நகர்த்தலின் போது டிங் லிரென் வெற்றி பெற்று அசத்தினார்.
இதன் மூலம் லிரென் முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். முக்கியமான கட்டத்தில் அவர், பெற்ற இந்த வெற்றியால் போட்டி மீண்டும் 6-6 என சமநிலையை எட்டி உள்ளது. இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன. இன்று (10-ம் தேதி) ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் 13-வது சுற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
12-வது சுற்றுக்கு பின்னர் குகேஷ் கூறும்போது, “இரண்டாவது பாதியில், பல ஆட்டங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் 12-வது சுற்றில் மோசமாக விளையாடிவிட்டேன். இங்கிருந்து டிராவுக்கு செல்ல மாட்டேன். மோசமான விளையாட்டுகள் நிகழவேச் செய்யும். ஆனால் ஒட்டுமொத்தமாக இரண்டாவது பாதியில், நானும் டிங் லிரெனும் முதல் பாதியை விட சிறப்பாக விளையாடுகிறோம் என்றே நினைக்கிறேன்" என்றார்