அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 175 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து கடந்த 6-ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக (பிங்க் பால் டெஸ்ட்) தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 337 ரன்களும் எடுத்தன.
இந்நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 28, நித்திஷ் ரெட்டி 15 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதையடுத்து நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது.
ரிஷப் பந்த், மேற்கொண்டு ரன்கள் சேர்க்க முடியாமல் மிட்செல் ஸ்டார்க் பந்தில், ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். அவர் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
அதைத் தொடர்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 7, ஹர்ஷித் ராணா 0, சிராஜ் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து விளையாடி 42 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்தில், மெக்ஸ்வீனியிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார்.
36.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.
கேப்டன் கம்மின்ஸ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். போலந்து 3 விக்கெட்களையும், ஸ்டார்க் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.
பின்னர் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடத் தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. விக்கெட் இழப்பின்றி 19 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. நாதன் மெக்ஸ்வீனி 10, உஸ்மான் கவாஜா 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடையச் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி சதமடித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.
3-வது டெஸ்ட் போட்டி: இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதிக தோல்வி: தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்ட கேப்டன்கள் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் (4 தோல்வி) சேர்ந்துள்ளார்.
இந்த வரிசையில் நவாப் அலிகான் பட்டோடி 6 தோல்விகளுடன் முதலிடத்திலும், 5 தோல்விகளுடன் சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்திலும் உள்ளனர். 4 தோல்விகளுடன் தத்தா கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, விராட் கோலி வரிசையில் ரோஹித் சர்மாவும் தற்போது சேர்ந்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் குறைந்த பந்துகளில் நிறைவடைந்த டெஸ்ட் போட்டி வரிசையில் இந்த போட்டி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் 1932-ல் மெல்பர்னில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியும் (656 பந்துகள்), 2-வது இடத்தில் 2022-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியும் (866 பந்துகள்), 3-வது இடத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 1895-ல் நடைபெற்ற போட்டியும் (911 பந்துகள்), 4-வது இடத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியும் (1031 பந்துகள்) உள்ளன.
பிங்க் பால் போட்டியில் ஆஸி. ஆதிக்கம்: பிங்க் பந்துகளில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை 13 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணி தோல்வி கண்டுள்ளது. இதில் 8 போட்டிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றுள்ளன.