அடிலெய்டு: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் சதம், மார்னஷ் லபுஷேனின் அரை சதம் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பகலிரவாக போட்டியாக அடிலெய்டில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நித்திஷ் குமார் ரெட்டி 42 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. மெக்ஸ்வீனி 38 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 20 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 87.3 ஓவர்களில் 337 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. நேதன் மெக்ஸ்வீனி 39 ரன்களில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்னில் பும்ரா பந்தில் நடையை கட்டினார். தனது 12-வது அரை சதத்தை கடந்த மார்னஷ் லபுஷேன் 126 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் நித்திஷ் குமார் ரெட்டி பந்தில் ஜெஸ்வாலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இந்திய பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்கள் குவித் டிராவிஸ் ஹெட் 111 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் தனது 8-வது சதத்தை விளாசினார். அபாரமாக விளையாடிய அவர், 141 பந்துகளில், 17 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் குவித்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் போல்டானார். மிட்செல் மார்ஷ் 9, அலெக்ஸ் கேரி 15, பாட் கம்மின்ஸ் 12, மிட்செல் ஸ்டார்க் 18, ஸ்காட் போலண்ட் 0 ரன்களில் வெளியேறினர்.
» 2025-க்கு பிறகே போப் பிரான்சிஸ் இந்தியா வருகை: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தகவல்
» கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி: ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம்
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். நித்திஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 24 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.
கே.எல்.ராகுல் 7, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, விராட் கோலி 11, ஷுப்மன் கில் 28, கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களில் நடையை கட்டினர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 29 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.