இங்கிலாந்து 533 ரன்கள் முன்னிலை

By KU BUREAU

வெலிங்டன்: நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 280 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 26 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 34.5 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வில் ஓ’ரூர்க்கி 0, டாம் பிளண்டெல் 16, நேதன் ஸ்மித் 14, மேட் ஹென்றி 0, டிம் சவுதி 0 ரன்களில் நடையை கட்டினர்.

இங்கிலாந்து அணி சார்பில் கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 76 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 378 ரன்கள் குவித்தது. பென் டக்கெட் 112 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 118 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 96 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

ஸாக் கிராவ்லி 8, ஹாரி புரூக் 55, ஆலி போப் 10 ரன்களில் வெளியேறினர். ஜோ ரூட் 73, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி, மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE