பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டார்க் வேகத்தில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

By KU BUREAU

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பகலிரவாக அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் துருவ் ஜூரெல், தேத்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தனர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது.

மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காத நிலையில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில், கேல்.ராகுல் இணைந்து பாட்னர்ஷிப்பை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 69 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மிட்செல் ஸ்டார்க் பிரித்தார். கே.எல்.ராகுல் 64 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்ஸரை அரை மனதுடன் தொட்ட போது கல்லி திசையில் நின்ற மெக்ஸ்வீனிடம் கேட்ச் ஆனது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 7 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் சிலிப் திசையில் நின்ற ஸ்மித்திடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 51 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் போலண்ட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கேப்டன் ரோஹித் சர்மாவையும் 3 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் போலண்ட். இதனால் இந்திய அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தாக்குதல் ஆட்டம் தொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 35 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் கல்லி திசையில் மார்னஷ் லபுஷேனிடம் எளிதாக கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் களமிறங்கிய அஸ்வின் 22 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

தொடர்ந்து ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரீத் பும்ரா ரன் ஏதும் எடுக்காத நிலையில் நடையை கட்டினர். மட்டையை சுழற்றிய நித்திஷ் ரெட்டி 54 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 44.1 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. உஸ்மான் காவாஜா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீம் பும்ரா பந்தில் சிலிப் திசையி நின்ற ரோஹித் சர்மாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். மெக்ஸ்வீனி 97 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 8 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 67 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 94 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE