கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 91 ஓவர்களில் 348 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93, கிளென் பிலிப்ஸ் 58, டாம் லேதம் 47 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 74 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 132, பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 103 ஓவர்களில் 499 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஹாரி புரூக் 197 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 171 ரன்கள் எடுத்த நிலையில் மேட்ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 146 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கிறிஸ்வோக்ஸ் 1, கஸ் அட்கின்சன் 48, ஷோயிப் பஷிர் 5 ரன்களில் நடையை கட்டினர். பிரைடன் கார்ஸ் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து அணி சார்பில் மேட்ஹென்றி 4, நேதன் ஸ்மித் 3, டிம்சவுதி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
151 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 49 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 1, டேவன் கான்வே 8 ரன்களில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய கேன் வில்லியம்சன் 86 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
» புதுச்சேரி அருகே கரையை கடந்தது பெஞ்சல் புயல்: ஒரே நாளில் வெள்ளக்காடாக மாறிய தலைநகர் சென்னை
» பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா: பயிற்சி மருத்துவர் சிக்கியது எப்படி?
ரச்சின் ரவீந்திரா 24, டாம் பிளண்டெல் 0, கிளென் பிலிப்ஸ் 19 ரன்களில் வெளியேறினர். டேரில் மிட்செல் 31, நேதன் ஸ்மித் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
வில்லியம்சன் 9 ஆயிரம் ரன்கள்: இங்கிலாந்து அணிக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் 2-வது இன்னிங்ஸில் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக அவர், 26 ரன்களை எடுத்திருந்த போது டெஸ்ட் அரங்கில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த மைல்கல் சாதனையை அவர், தனது 103-வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார். மேலும் உலக டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை குமார் சங்கக்கரா, யூனிஸ் கான் ஆகியோர் பகிர்ந்து கொண்டார். இந்த வகை சாதனையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (99 போட்டி), மேற்கு இந்தியத் தீவுளின் பிரையன் லாரா (101 போட்டி) முதலிடத்தில் உள்ளனர்.