கிறைஸ்ட்சர்ச்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. டேவன் கான்வே 2 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார்.
இதையடுத்த களமிறங்கிய கேன் வில்லியம்சன், கேப்டன் டாம் லேதமுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். டாம் லேதம்சம் 54 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் பிரைன் கார்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஆலி போப்பிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 49 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ஷோயிப் பஷிர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கேன் வில்லியம்சன் 90 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 36-வது அரை சதத்தை கடந்தார். தேனீர் இடைவேளையில் நியூஸிலாந்து அணி 51 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. இதன் பின்னர் கடைசி செஷனில் அந்த அணி ஆட்டம் கண்டது. டேரில் மிட்செல் 19 ரன்களில் பிரைன் கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ நவ.29, 2024
» கடலில் சிக்கிய கடலூர் மீனவர்கள் உட்பட 10 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டது கடலோர காவல் படை
சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேன் வில்லியம்சன் 197 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில், பேக்வேர்டு பாயின்ட் திசையில் நின்ற ஸாக் கிராவ்லியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 6 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 ரன்களை கடந்த பின்னர் சதம் அடிக்காமல் வில்லியம்சன் ஆட்டமிழந்தது இதுவே முதன்முறையாகும்.
இதன் பின்னர் டாம் பிளண்டெல் 17, நேதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 ரன்களில் நடையை கட்டினர். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 83 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் 41, டிம் சவுதி 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயிப் பஷிர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கைவசம் ஒரு விக்கெட் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது நியூஸிலாந்து அணி.