இந்திய அணி அபார வெற்றி: முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

By KU BUREAU

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 மற்றும் ஆஸ்திரேலியா 104 ரன்கள் எடுத்தன.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல், 176 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் உடன் 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். படிக்கல் 25 ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் முதல் போட்டியில் சதம் விளாசி 297 பந்துகளுக்கு 161 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் ஒரு ரன்களில் வெளியேறினார். அந்த தருணத்தில் கோலி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடையே 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. வாஷி, 94 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த நிதிஷ் ரெட்டி ஆட்டத்தில் அதிரடி காட்டினார். கோலியுடன் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 143 பந்துகளில் சதம் விளாசினார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நேதன் மெக்ஸ்வீனி, கம்மின்ஸ் மற்றும் லபுஷேன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 4ம் நாள் ஆட்டம் தொடங்கிய இன்று கவாஜா 4 ரன்கள், ஸ்மித் 17 ரன்கள், ஹெட் 89 ரன்கள், மார்ஸ் 47 ரன்கள், ஸ்டார்க் 12ரன்கள், லயன் டக் அவுட், கேரே 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்ஸில் 58.4 ஓவர்களில் 238 ரன்களில் சுருண்டது. எனவே இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். சுந்தர் 2 விக்கெட்டுகளும், ராணா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE