பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்கியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாததால் இந்திய அணியானது வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் களமிறங்கியது.
ஆஸ்திரேலிய மண்ணில் 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றிருந்தது. இதனால் இம்முறையும் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சந்தித்தது இந்திய அணி.
பெர்த்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 5 ஆக இருந்தபோது ஜெய்ஸ்வால் டக் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து படிக்கலும் டக் அவுட் ஆனார். இதனையடுத்து ஹாசில் வுட்டின் பந்துவீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. விராட் கோலி 5 ரன்னிலும், கேஎல் ராகுல் 26 ரன்களிலும், ஜூரல் 11 ரன்களிலும், சுந்தர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
» ரோட்டுக்கடையில் நடிகை நயன்தாராவுக்கு பிறந்தநாள் ட்ரீட் வைத்த விக்னேஷ் சிவன்!
» அதிகரிக்கும் நஷ்டம்: 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது ஓலா நிறுவனம்!
பின்னர் கொஞ்சம் நிதானமாக ஆடிய ரிஷப் பந்த் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராணா 7 ரன்களிலும், பும்ரா 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் நம்பிக்கை கொடுத்த நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்களில் அவுட்டானார். இதனால் இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாசில்வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ், மார்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஆடி வருகிறது.