மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த வட நெம்மேலியில் பீச் வாலிபால் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச பீச் வாலிபால் போட்டி, செங்கை மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி - தனியார் ரிசார்ட்டையொட்டி உள்ள கடற்கரையில் நேற்று தொடங்கியது.
இப்போட்டி 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 42 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 24 அணிகள் என மொத்தம் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில், 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை அறிமுகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டிஆர்பி ராஜா, தமிழ்நாடு வாலிபால் அசோசியேஷன் தலைவர் தெய்வசிகாமணி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, ஓய்வுபெற்ற டிஜிபிகள் தேவாரம், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு விளையாட்டில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. 2022-ம் ஆண்டு சர்வதேச 44-வது சதுரங்க போட்டி, சர்வதேச சர்பிங் போட்டி, சைக்கிளோத்தான் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
» தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை: பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
சர்வதேச விளையாட்டு நகரமாக தமிழ்நாடு மாறும். அனைத்து, போட்டிகளையும் நடத்தும் இடமாக கிழக்கு கடற்கரை சாலை மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.