பிசிசிஐ எதிர்ப்பால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைத்தது ஐசிசி

By KU BUREAU

புதுடெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களை துபாயில் நடத்த வேண்டும் என ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்தது. ஆனால் தொடரை நடத்தும் உரிமையை பெற்றுள்ள பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே ஐசிசி தொடர்களின் போது போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் தொடரை நடத்தும் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ‘டிராபி டூர்’ நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைதள பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில்“தயாராகுங்கள் பாகிஸ்தான்! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பை சுற்றுப்பயணம் நவம்பர் 16-ம் தேதி இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. இந்த பயணம் ஸ்கார்டு, முர்ரி, ஹன்சா மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களுக்கும் செல்கிறது” என தெரிவித்துள்ளது.

இதில் ஸ்கார்டு, முர்ரி, ஹன்சா உள்ளிட்ட பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளன. தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த செயலை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலை தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று ஐசிசியின் உயர்மட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து டிராபி டூரை ஐசிசி நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிசிசிஐ செயலாளர் ஐசிசியை அழைத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கீழ் வரும் பல நகரங்களுக்கு டிராபி சுற்றுப்பயணத்தை நடத்துவதற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கோப்பை சுற்றுப்பயணம் நடத்தக்கூடாது” என்றார்.

இதுகுறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் கூறும்போது "கோப்பை சுற்றுப்பயணம் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருகிறது. குறிப்பிடப்பட்ட நான்கு நகரங்களைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைவருக்கும் தகவல்கூறியதா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இல்லையென்றால் அது நிச்சயமாக சரியான விஷயம் அல்ல. எந்தவொரு சர்ச்சைக்குரிய பிராந்தியத்திற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோப்பையை எடுத்துச் செல்ல ஐசிசி அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE