மும்பை: இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியில் உள்ள ஒரு தரப்பினர் ஏற்கெனவே ஆஸ்திரேலியா சென்றடைந்துவிட்டனர்.
இந்நிலையில் மீதமுள்ள இந்திய அணிவீரர்கள் நேற்று மும்பையில் இருந்துபுறப்பட்டுச் சென்றனர். இந்த குழுவினருடனும் கேப்டன் ரோஹித் சர்மா பயணிக்கவில்லை. அவர், பெர்த்நகரில்வரும் 22-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், நிருபர்களிடம் கூறியதாவது: ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஜஸ்பிரீத் பும்ரா துணை கேப்டனாக உள்ளார். இதனால் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில் பும்ரா கேப்டனாக அணியை வழிநடத்துவார்.
அணியில் தொடக்க வரிசையில் விளையாடக்கூடிய அபிமன்யு ஈஸ்வரன், கே.எல்.ராகுல் ஆகிய இருவருமே உள்ளனர். ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில் இவர்களில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்வோம். இந்த இடத்துக்கு பல்வேறு விருப்ப தேர்வுகள் உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி நெருங்கும் போது சிறந்த 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வோம். கே.எல்.ராகுல் அனுபவம் வாய்ந்தவர். அவரால் தொடக்க வீரராகவும், 3-வது இடத்திலும், 6-வது இடத்திலும் களமிறங்க முடியும். தேவைப்பட்டால் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில் அணிக்கான பணியை கே.எல்.ராகுல் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.