12 வருடத்துக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்திய அணி

By KU BUREAU

புனே: புனே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி 12 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. அதேவேளையில் இந்திய மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வரலாற்று சாதனை படைத்துள்ளது நியூஸிலாந்து அணி.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் எடுத்தன. 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. டாம் பிளண்டெல் 30, கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 69.4 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாம் பிளண்டெல் 41, மிட்செல் சாண்ட்னர் 4, டிம் சவுதி 0, அஜாஸ் படேல் 1, வில்லியம் ஓ’ரூர்க்கி 0 ரன்களில் நடையை கட்டினர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4, ரவீந்திர ஜடேஜா 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ரோஹித் சர்மா 8 ரன்களில் மிட்செல் சாண்ட்னர் பந்தில் தடுப்பாட்டம் மேற்கொண்ட போது ஷார்ட் லெக் திசையில் கேட்ச் ஆனது. இதையடுத்து ஷுப்மன் கில் களமிறங்க மறுமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு விரைவாக ரன்கள் குவித்தார். மட்டையை சுழற்றிய அவர், 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது 8-வது அரை சதத்தை கடந்தார். ஷுப்மன் கில் 23 ரன்களில் சாண்ட்னர் பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற டேரில் மிட்செல்லிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். சிறப்பாக விளையாடி பந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 65 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் சாண்ட்னர் பந்தில் டேரில் மிட்செல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அப்போது இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் இந்திய அணி ஆட்டம் கண்டது. ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி 17 ரன்களில் சாண்ட்னர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தார். சர்பராஸ் கான் 9 ரன்களில் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களில் கிளென் பிலிப்ஸ் பந்தில் நடையை கட்டினார். அஸ்வின் 18, ஆகாஷ் தீப் 1 ரன்களில் வெளியேறினர்.

இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாட முயன்ற ரவீந்திர ஜடேஜா 84 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 60.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பும்ரா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 6, அஜாஸ் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியானது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. அந்த அணி பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 1955-ம் ஆண்டு முதல் நியூஸிலாந்து அணி பல்வேறு காலக்கட்டங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது.

எனினும் தற்போதுதான் அதுவும் 69 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நியூஸிலாந்து அணியின் சாதனை வெற்றியானது இந்திய அணி சொந்த மண்ணில் கடந்த 12 ஆண்டுகளாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று குவித்ததற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சொந்த மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித டெஸ்ட் தொடரையும் இழக்காமல் வலம் வந்த இந்திய அணி தற்போது முதன்முறையாக தொடரை இழந்துள்ளது. இரு இன்னிங்ஸையும் சேர்த்து 13 விக்கெட்களை வேட்டையாடிய மிட்செல் சாண்ட்னர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

மதிய உணவு இடைவேளையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி அதன் பின்னர் மேற்கொண்டு 97 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை கொத்தாக தாரைவார்த்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் போராடக்கூடிய அளவுக்கான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்த பெங்களூரு ஆடுகளத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றிருந்ததால் புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்து. ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களே சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவை சந்தித்து தோல்வி அடைந்துள்ளது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மீண்டு வந்து சாதித்த நியூஸி. - நியூஸிலாந்து அணி, இலங்கை மண்ணில் சமீபத்தில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்தது. அங்கு சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்திருந்தது. இந்த தோல்வியால் டிம் சவுதி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் இந்திய டெஸ்ட் தொடருக்கு டாம் லேதம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடைசி நேரத்தில் சீனியர் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலக நேரிட்டது. டாம் லேதம், டிம் சவுதி ஆகியோர் மட்டுமே அணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள். எனினும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியைவிட பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு சரித்திர சாதனை வெற்றியை பெற்றுள்ளது நியூஸிலாந்து அணி.

17-வது முறை.. சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழப்பது இது 17-வது முறையாகும். இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் தலா 5 முறையும், ஆஸ்திரேலியா 4 முறையும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளன. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா தலா ஒரு முறை இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வரிசையில் தற்போது நியூஸிலாந்து இணைந்துள்ளது.

வெற்றி சராசரி குறைந்தது: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 98 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. ஆனால் இந்திய அணியின் வெற்றி சராசரி 62.82 ஆக சரிந்துள்ளது. 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சராசரி 62.50 ஆக இருக்கிறது.

புனே டெஸ்ட் போட்டி தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவது கடினமாக மாறி உள்ளது. அடுத்ததாக இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

மொத்தம் இந்த 6 போட்டிகளில் குறைந்தது இந்திய அணி 4 வெற்றிகளை பெற வேண்டும். இரு போட்டிகளை டிரா செய்ய வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்க முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE