இந்திய அணி படுதோல்வி; 11 ஆண்டுகால வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து அணி!

By KU BUREAU

புனே: இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

புனேவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி 79.1 ஓவரில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி மிட்செல் சாண்ட்னரின் சுழற்பந்து வீச்சில் 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டனுமான டாம் லாதம் சிறப்பாக விளையாடி 86 ரன்கள் சேர்த்தாலும், மற்ற வீரர்கள் கைகொடுக்காததால், மூன்றாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு சுருண்டது. வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 359 ரன்கள் இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

இந்தியா தரப்பில் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் நிலைத்து ஆட மறுபுறம் ரோகித் ஷர்மா 8 ரன்களிலும், கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 77 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் 0, கோலி 17 ரன்கள், சர்பராஸ் கான் 9 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்கள், அஸ்வின் 18 ரன்கள், ஆகாஷ் தீப் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் போராடிய ரவீந்திர ஜடேஜாவின் 42 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 60.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னர் 6 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

2013-க்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இந்தியா கடைசியாக 2012 டிசம்பரில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்திடம் 1-2 என இழந்தது. அப்போதிருந்து, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 தொடர்களை இந்தியா வென்றது. இதுவரை நான்கு போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது.

2013 முதல் 2024 ஆம் ஆண்டு வங்கதேச தொடர் வரை மொத்தம் 53 ஆட்டங்களில் ஆடி இந்திய அணி 42 போட்டிகளில் வெற்றி பெற்றது, நான்கில் தோல்வியடைந்தது மற்றும் 7 போட்டிகளை டிரா செய்தது. 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியாவின் மூன்றாவது தொடர் தோல்வி இதுவாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE