சர்பராஸ் கான் 150, ரிஷப் பந்த் 99 ரன் விளாசியும் பலன் இல்லை: 54 ரன்களுக்கு 7 விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்தது இந்தியா

By KU BUREAU

பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்பராஸ் கான் 150 ரன்களும், ரிஷப் பந்த் 99 ரன்களும் விளாசி இந்திய அணியை சரிவில் இருந்து அபாரமாக மீட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் வெளியேறியதும் இந்திய அணி விரைவாக ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134, டேவன் கான்வே 91, டிம் சவுதி 65 ரன்கள் சேர்த்தனர்.

356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 49 ஓவர்களில், 3 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34, ரோஹித் சர்மா 52, விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழந்தனர். சர்பராஸ் கான் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

சர்பராஸ் கானுடன் இணைந்து ரிஷப் பந்த்தும் மட்டையை சுழற்றினார். சர்பராஸ் கான் 110 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை விளாசினார். ரிஷப் பந்த் 55 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் அரை சதம்கடந்தார். இந்திய அணி 71 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்திருந்த போது மழைகாரணமாக ஆட்டம் தடைபட்டது. இதன் பின்னர் பிற்பகல் 1.50 மணிக்கு ஆட்டம் தொடங்கப்பட்டது.

சிறப்பாக விளையாடி வந்த சர்பராஸ் கான் 195 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். டிம் சவுதி வீசிய பந்தை சர்பராஸ் கான் கவர் திசையில் விளாச முயன்ற போது அஜாஸ் படேலிடம் கேட்ச் ஆனது. 4-வது விக்கெட்டுக்கு சர்பராஸ் கான் - ரிஷப் பந்த் ஜோடி 177 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். சர்பராஸ் கான் விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 105 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம் ஓ’ரூர்கி பந்தில் போல்டானார்.

வில்லியம் ஓ’ரூர்கி ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை ரிஷப் பந்த் கட் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது. இதன் பின்னர் இந்திய அணி ஆட்டம் கண்டது. ஆட்டம் நியூஸிலாந்து அணியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. கே.எல்.ராகுல் 12, ரவீந்திர ஜடேஜா 5 ரன்களில் வில்லியம் ஓ’ரூர்கி பந்தில் நடையை கட்டினர். தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 15, ஜஸ்பிரீத் பும்ரா 0, முகமது சிராஜ் 0 ரன்களில் மேட் ஹென்றி பந்தில் வெளியேற இந்திய அணி 99.3 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்தீப் யாதவ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 408 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. இதன் பின்னர் 2-வது புதிய பந்து எடுக்கப்பட்டதும் மேற்கொண்டு 54 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்களையும் கொத்தாக தாரைவார்த்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, வில்லியம் ஓ’ரூர்கி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்களையும், டிம் சவுதி, கிளென் பிலிப்ஸ்ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 107 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. அந்த அணி 0.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ரன் ஏதும் எடுக்காமல் இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. கேப்டன் டாம் லேதம், டேவன் கான்வே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 10 விக்கெட்கள் இருக்க இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை சந்திக்கிறது நியூஸிலாந்து அணி.

திரும்புமா 2004? சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி குறைந்த இலக்கை கொடுத்து கடைசியாக 2004-ம் ஆண்டு வெற்றி கண்டிருந்தது. அப்போது மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 107 ரன்கள் இலக்கை கொடுத்த இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதே நிலைமை தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும் நிகழுமா? என்பது கடைசி நாளான இன்று தெரியவரும்.

35 வருடங்களுக்குப் பிறகு: நியூஸிலாந்து அணி கடைசியாக 1989-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் பின்னர் நியூஸிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. தற்போது 35 வருடங்களுக்குப் பிறகு அந்த அணிக்கு பெங்களூரு டெஸ்ட் போட்டியின் மூலம் வெற்றி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.

மழை வருமா? பெங்களூரு பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இன்று காலையும் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும்.

7-வது முறையாக தவறிய சதம்: நியூஸிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் 90 ரன்களை கடந்து சதம் அடிக்காமல் ஆட்டமிழப்பது இது 7-வது முறையாகும். இந்த வகை மோசமான சாதனையில் இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர், 10 முறை ஆட்டமிழந்துள்ளார். ராகுல் திராவிட் 9 முறையும், தோனி 5 முறையும் ஆட்டமிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE