பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடி வருகிறது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் பெங்களுருவில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா 2 ரன்கள், விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் டக் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தனர். இதன் பின்னர் மழை காரணமாக முதல் செஷன் சில நிமிடங்கள் தடைப்பட்டது. அதன்பின்னர் ஜெய்ஸ்வால் 63 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கே.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகினர். இதன்பின்னர் ரிஷப் பந்த் 20 ரன்களிலும், பும்ரா ஒரு ரன்னிலும், குல்தீப் யாதவ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்களில் சுருண்டது. நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூர்கி 4 விக்கெட்டுகளையும், டிம் சவுதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதம் - டெவோன் கான்வே ஜோடி இறங்கினர். 15 ரன்கள் எடுத்த கேப்டன் டாம் லாதம் குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.
» ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் தீர்மானம்: நிறைவேற்றியது உமர் அப்துல்லா அமைச்சரவை!
» 'அமரன்’ டூ ‘லக்கி பாஸ்கர்’: தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
அடுத்த வந்த வில் யங்குடன் தொடக்க வீரர் கான்வே ஜோடி அமைத்து அரைசதம் அடித்தார். இதனையடுத்து வில் யங் 33 ரன்னுக்கு அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே அஸ்வின் சுழலில் சிக்கி 91 ரன்களுக்கு அவுட் ஆனார்.
பிறகு களத்தில் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டேரில் மிட்செல் 14 ரன்களுடனும் இருக்க நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்த நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில் டேரல் மிட்செல் 18 ரன்களுக்கும், டாம் ப்ளூந்தல் 5 ரன்களுக்கும், பிலிப்ஸ் 14 ரன்களுக்கும், ஹென்ரி 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்து ஆடிய டிம் சவுத்தி 73 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஜாஸ் பட்டேல் 4 ரன்களில் வெளியேறினார். ஆனாலும், இறுதிக்கட்டத்தில் ரச்சின் ரவீந்திரா பவுண்டரிகளாக விரட்டி ரன்கள் குவித்து அசத்தினார். அவர் 157 பந்துகளில் 13 பவுண்டரி 4 சிக்சருடன் 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 91.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, குல்தீப் ஆகியோர் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 356 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி அடுத்து தனது 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.