முதல் டெஸ்டில் ஹென்றி, ஓ’ரூர்கியின் வேகத்தில் 46 ரன்னுக்கு ஆட்டமிழந்து இந்தியா மோசமான சாதனை

By KU BUREAU

பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனையை பதிவு செய்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்க இருந்த இந்த போட்டி மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தது. இதனால் நேற்று 2-வது ஆட்டம் 9.15 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் குல்தீப் யாதவும் இடம் பெற்றிருந்தார். ஷுப்மன் கில் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டார்.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ரன்கள் சேர்க்க தடுமாறியது. குளிர்ந்த வானிலையை பயன்படுத்தி நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங், சீரான வேகத்தால் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தனர். ரோஹித் சர்மா 16 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதியின் பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி, வில்லியம் ஓ‘ரூர்கி வீசிய பவுன்சர் பந்தை தடுத்து விளையாட முயன்றார்.

பந்து மட்டையில் பட்டு லெக் கல்லியை நோக்கி பாய அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த கிளென் பிலிப்ஸ் அற்புதமாக கேட்ச் செய்தார். 9 பந்துகளை சந்தித்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய சர்பராஸ் கான், மேட் ஹென்றி பந்தில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். மிட் ஆஃப் திசையில் அவர், விளாசிய பந்தை டேவன் கான்வே அபாரமாக பாய்ந்து ஒற்றை கையால் கேட்ச் செய்து மிரளச் செய்தார். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த சர்பராஸ் கான் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே நடையை கட்டினார்.

சற்று தாக்குப்பிடித்து விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 63 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம் ஓ’ரூர்கி ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே அகலமாக வீசிய பந்தை பாயிண்ட் திசையில் விளாசிய போது அஜாஸ் பட்டேலிடம் கேட்ச் ஆனது. 31 ரன்களுக்கு டாப் ஆர்டர் விக்கெட்களை இழந்த இந்திய அணி அதன் பின்னர் மீளமுடியாமல் போனது.

கே.எல்.ராகுல் 6 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத நிலையில் லெக் திசையில் வீசப்பட்ட பந்தை தட்டிவிட முயன்ற போது விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல்லிடம் கேட்ச்ஆனது. இதையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காத நிலையில் மேட் ஹென்றி பந்தை லெக் திசையில் பிளிக் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டை விளம்பில் பட்டு பாயிண்ட் திசையில் நின்ற அஜாஸ் பட்டேலிடம் கேட்ச் ஆனது.

ரவிச்சந்திரன் அஸ்வினையும் ரன் ஏதும் எடுக்கவிடாமல் வெளியேற்றினார் மேட் ஹென்றி. நிதானமாக விளையாடி வந்தரிஷப் பந்த் 49 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற டாம் லேதமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 2, ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னில் நடையை கட்ட இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 13.2 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். வில்லியம் ஓ’ரூர்கி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 50ரன்களை கூட எட்ட முடியாமல் இந்திய அணி ஆட்டமிழப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 1987-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது. மேலும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பதும் இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர்1976-ம் ஆண்டு வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 81 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி இருந்தது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு டேவன் கான்வே அதிரடி தொடக்கம் கொடுத்தார். இதனால் அந்த அணி 12.5 ஓவர்களிலேயே 46 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. மட்டையை சுழற்றிய டேவன் கான்வே 54 பந்துகளில், 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் தனது 10-வது அரை சதத்தை கடந்தார். அவர், அஸ்வின் வீசிய ஓவர்களில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் டாம் லேதம் 49 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு டாம் லேதம் - டேவன்கான்வே ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வில் யங் 73 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தை ஸ்வீப் ஷாட் விளையாட முயன்றார். அப்போது பந்து மட்டை விளிம்பில் பட்டு ஷாட்பைன் லெக் திசையில் நின்ற குல்தீப் யாதவிடம் கேட்ச் ஆனது. அதிரடியாக விளையாடிய டேவன் கான்வே 105 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாட முயன்று போல்டானார்.

2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா 22, டேரில் மிட்செல் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE