வெற்றியின் விளிம்பில் இந்திய அணி - 146 ரன்களில் சுருண்டது வங்கதேசம்!

By KU BUREAU

கான்பூர்: இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா வெற்றியின் விளிம்பில் உள்ளது.

கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசம் - இந்தியா இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் அணி முதலில் பேட் செய்தது. 3 விக்கெட்டிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது, மழையால் 2 மற்றும் 3 ஆம் நாள் ஆட்டங்கள் நடைபெறவில்லை. நேற்று 4 ஆம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மோமினுல் ஹக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அடுத்ததாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 3 ஓவரில் 50 ரன்களும், 10.1 ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக எடுக்கப்பட்ட 50 மற்றும் 100 ரன்கள் இன்னிங்ஸாக இன்றைய ஆட்டம் மாறி புதிய சாதனை படைத்தது.

52 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்று ஆடிய வங்க தேச அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஷட்மன் இஸ்லாம் மட்டும் நிலைத்து ஆடி 50 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் தாக்குபிடித்து ஆடிய முஸ்பிஹுர் ரஹிம் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

94 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆட உள்ளது. எனவே இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என்ற நிலை உருவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE