கோவில்பட்டி 4-ம் நாள்: அகில இந்திய ஹாக்கி போட்டியில் கர்நாடகா அணி வெற்றி

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்து வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வெற்றிப் பெற்றது.

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 13-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்து வரும் போட்டியின் 4-வது நாளான இன்று காலை 7 மணிக்கு நடந்த 13-வது லீக் போட்டியில் சென்னை, ஜிஎஸ்டி மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும், கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதின. இதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வெற்றிப் பெற்றது.

7-வது நிமிடத்தில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வீரர் ஆனந்த்.ஹெச்.எம். பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார். 18-வது நிமிடத்தில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வீரர் ராகுல்.சி.ஜே. பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார். 35-வது நிமிடத்தில் சென்னை ஜிஎஸ்டி மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் பாலாஜி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.

57-வது நிமிடத்தில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வீரர் ஆனந்த்.ஹெச்.எம். பெனால்டி ஸ்ட்ரோக் முறையில் ஒரு கோல் அடித்தார். 60-வது நிமிடத்தில் சென்னை ஜிஎஸ்டி மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் அபிஷேக் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.

சிறந்த ஆட்டக்காரர் விருது கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வீரர் ராகுல்.சி.ஜே. வழங்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு பாலாஜி குமார் மற்றும் சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE