ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே தேவை, அவர் காட்டிய பாதை என்னானது?...பாஜகவுக்கு சாக்‌ஷி மாலிக் கேள்வி!

By காமதேனு

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஷ் பூஷனின் மகனுக்கு பாஜக சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது குறித்து மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், 2016 - 2019 வரையிலான காலத்தில் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போராட்டத்தின்போது சாக்‌ஷிமாலிக்

நாடு முழுவதும் இதற்கு கண்டனம் வலுத்ததையடுத்து பிரிஜ் பூஷன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆறு முறை எம்.பியான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பாஜக மீண்டும் சீட் வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. அவருக்கு பாஜக சீட் வழங்கவில்லை.

ஆனால், அவருக்குப் பதிலாக அவரது தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம், கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அவரது மகன் கரண் பூஷண் சிங்குக்கு சீட் வழங்கியுள்ளது பாஜக தலைமை. பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார்கள் நாட்டையே அதிர வைத்த சூழலிலும் அவரது மகனை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்

அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டின் மகள்கள் தோற்றனர், பிரிஜ் பூஷன் வென்றார். நாங்கள் அனைவரும் எங்கள் உயிரைப் பணயம் வைத்து, வெயிலிலும், மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கோருகிறோம். கைது செய்வதை விடுங்கள், இன்று அவரது மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மனஉறுதியை உடைத்துள்ளீர்கள்.

ஒரு மனிதனுக்கு முன்னால் இவ்வளவு பலவீனமாக உள்ளதா நம் நாட்டு அரசு? ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே தேவை, அவர் காட்டிய பாதை என்னானது?" எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE