பாரிஸ் ஒலிம்பிக்கின் பாய்மர படகுப் போட்டியில் பங்கேற்க தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகுப் பிரிவு போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது போட்டியாளராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார்.
இன்று பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதி வாய்ப்பில் அவர் பங்கேற்று இந்த வாய்ப்பை உறுதி செய்துள்ளார். இதில் பாய்மரப் படகுப் போட்டியில் வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் நேத்ரா குமணன் 67 புள்ளிகள் பெற்று டாப் 5-ல் ஒருவராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ILCA 6 பிரிவில் அவர் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். நேத்ரா குமணன் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.
டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்’ என்று தெரிவித்துள்ளார்
இதையும் வாசிக்கலாமே...
வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!
இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ