ஆசிய விளையாட்டில் ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கம்! துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சாதித்த ஈஷா சிங்!

By காமதேனு

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் நான்கு பதக்கங்களை வென்று அசத்தியுள்ள இந்திய வீராங்கனை ஈஷா சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பிரதமருடன் ஈஷா சிங்

சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பங்கு பெற்று பதக்கங்களை குவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக துப்பாக்கி சுடும் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதில் இந்திய பெண் வீராங்கனை ஈஷா சிங் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஈஷா சிங்கின் தந்தை மோட்டார் விளையாட்டில் தேசிய வீரராக இருந்தவர். அதனால் ஈஷாவிற்கு விளையாட்டு ஆர்வம் இயல்பாகவே ஏற்பட்டிருக்கிறது. 2005ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி பிறந்த ஈஷா, தனது 9ம் வயதில் துப்பாக்கிச் சுடும் விளையாட்டை தொடங்கினார்.

பதக்கத்துடன் ஈஷா சிங்

2014ம் ஆண்டில் கையில் துப்பாக்கி ஏந்திய ஈஷா, 2018ம் ஆண்டு தேசிய துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் சாம்பியன் ஆனார். 13 வயதில், சர்வதேச பதக்கங்களை வென்ற வீரர்களான மனு பாக்கேர், ஹீனா சித்து ஆகியோரை வீழ்த்திய ஈஷா, யூத், ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் மூன்று தங்கப்பதக்கங்களை தட்டிச்சென்றார்.

இதற்கடுத்து, சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர் ஜூனியர் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இந்த விளையாட்டில் பயிற்சி எடுக்க ஆரம்பித்த வெறும் நான்கே ஆண்டுகளில், ஈஷா தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த வெற்றிகள் கொடுத்த உத்வேகத்தில் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டார். தேசிய சாம்பியன்ஷிப் வென்ற அடுத்த ஆண்டே, ஜெர்மனியில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்று திரும்பினார். அதே ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் நடந்த சீனியர் உலகக் கோப்பையில் கலந்துகொண்டு பல ஜாம்பவான்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். அதற்கு அடுத்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.

இப்படி தொடர் வெற்றிகள் பெற்று வரும் ஈஷா தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் (குழு) தங்க பதக்கம், 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் (தனிப்போட்டி) வெள்ளிப் பதக்கம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் (குழு) வெள்ளி மற்றும் 10 மீட்டர் தனிநபருக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி என நான்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமையை தேடித் தந்துள்ளார்.

2024 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்கிறார் ஈஷா சிங்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!

சென்னையில் பரபரப்பு... அடுத்தடுத்து மயங்கி விழுந்த 17 ஆசிரியர்கள்!

அதிர்ச்சி... முதல்வரின் வீடு மீது தாக்குதல் முயற்சி; துப்பாக்கிச் சூடு!

இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE