ரபாடாவின் பந்துவீச்சில் சிதைந்த இந்தியா; ஒற்றை ஆளாக போராடும் கே.எல்.ராகுல் - முதல் டெஸ்ட் நிலவரம்!

By காமதேனு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் 208 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது இந்திய அணி.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் போட்டி,டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று செஞ்சுரியனில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் செய்தனர். இந்த ஜோடி ஐந்து ஓவர்கள் வரை மட்டுமே நீடித்தது. முதல் விக்கெட்டாக ரபாடாவின் வேகப்பந்து வீச்சில் ரோகித் சர்மா 4 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்த சில ஓவர்களில் ஜெய்ஸ்வாலும் 17 ரன்களில் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டானார். ஷுப்மன் கில் இரண்டு ரன்களில் நந்த்ரே பர்கர் ஓவரில் அவுட் ஆக 24 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்களையும் இந்திய அணி இழந்தது. அதிர்ச்சியில் இருந்து இந்திய அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் விராட் கோலி ஈடுபட்டனர். இருவரும் நிதானத்துடன் விளையாடி ரன்களை குவிப்பதில் முனைப்பு காட்டினார். மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்த இக்கூட்டணி, அதன்பிறகு நீடிக்க தவறியது. ஸ்ரேயஸ் ஐயர் 31 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடாவின் பந்துவீச்சில் போல்டானார். அதே ரபாடாவின் ஓவரில் 38 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி அவுட் ஆனார். இதன்பின் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்களோடு நடையைக் கட்டினார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். அவரோடு சிறிது நேரம் ஜோடி போட்ட ஷர்துல் தாக்கூர் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக வந்த பும்ரா ஒரு ரன்னில் அவுட்டானர். இதனைத் தொடர்ந்து முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை இந்தியா பெற்றுள்ளது. ராகுல் 105 பந்துகளுக்கு 70 ரன்களுடனும், சிராஜ் 10 பந்துகளுக்கு 0 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளையும், பர்கெர் 2 விக்கெட்டுகளையும், ஜான்சென் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


இளம் பெண்ணுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விஷால்... கேமராவைப் பார்த்ததும் பதறி ஓடிய வீடியோ வைரல்!

இந்தியர்களை பாதுகாக்கும் அடையாளம் வீர்பால் திவாஸ்: பிரதமர் மோடி

கட்சிகளுக்கு ரூ.200 கோடி நன்கொடை... வேதாந்தா நிறுவனம் தாராளம்!

கேரளாவில் தாண்டவமாடும் கொரோனா: 3096 பேருக்கு சிகிச்சை!

தூத்துக்குடிக்கு ரஜினி திடீர் விசிட்... பின்னணி என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE